ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா அடுத்துள்ள ஆர்.கே பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரசம்பேட்டை அருகில் தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் ஆர்.கே பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் சேகர் தலைமையில் வருவாய்த்துறையினர் நரசம்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திருத்தணியிலிருந்து ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்து பார்த்தபோது, அதில் 15 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டு பிடித்தனர்.
இதனையடுத்து ரேஷன் அரிசியை கடத்தி சென்ற சென்னை செங்குன்றம் பகுதியில் வசித்த மனோகர்(48) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அரிசியை ஆந்திராவிற்கு கடத்தி சென்றதாக லாரி ஓட்டுனர் கூறினார். இதனை அடுத்து அவரை திருவள்ளூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் ரேஷன் அரிசியுடன் லாரியை வருவாய்த்துறையினர் பள்ளிப்பட்டு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்துள்ளனர்.
அதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் போந்தவாக்கம் கிராமத்தில் புதுவாயல்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில் கடந்த 12ம் தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போது, போந்தவாக்கம் கிராமத்திலிருந்து ஊத்துக்கோட்டை நோக்கி சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்து பார்த்தனர். அதில் புதுக்கோட்டைக்கு சுமார் 1.5 டன் எடை கொண்ட 32 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த யுவராஜ்(33) என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்துள்ளனர்.