ஆந்திராவில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் அருகே உள்ள கடல பள்ளி கிராமத்தில் நேற்று காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இதில் 2 பேர் குழந்தைகள் ஆவர். பெல்லாரியில் நடைபெற்ற பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் கோரா வெங்கட்டப்பாவின் மகள் திருமணத்திற்காக அனந்தபூர் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது எதிர் திசையில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ஆந்திர மாநில சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது பற்றி இன்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனந்தபுரம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி உதவி தொகை 2 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது .