நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ள ஆந்திர முதலமைச்சர் திரு. ஜெகன்மோகன் ரெட்டியீடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.எ பாப்டேவுக்கு ஆந்திர முதலமைச்சர் திரு. ஜெகன்மோகன் ரெட்டி அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் உச்ச நீதிமன்ற முத்த நீதிபதி திரு. என்.வி ரமணா தெலுங்கு தேசகட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திரு. சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறியிருந்தார். நீதிபதியின் இச்செயல் நீதித்துறை மரபு மற்றும் கொள்கையை மீறும் விதமாக உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் வழக்கறிஞர் சுனில்குமார் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஆந்திர முதலமைச்சர் திரு. ஜகன்மோகன் ரெட்டி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் குறிப்பாக உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி திரு. என்.வி ரமணா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து திரு. ஜெகன்மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.