தர்மபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்திலுள்ள சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா சென்ற 3ஆம் தேதி துவங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மாணிக்கவாசகர் குருபூஜை, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியானது நடந்தது. இதையடுத்து மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது.
அதன்பின் திருநெறிய தெய்வத்தமிழ் வழிபாட்டு சபையினரால் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து நால்வர் திருவீதி உலாவும், அபிஷேக பொருட்கள் வரிசை அழைப்பும் நடந்தது. பின் விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் காலை சிவகாமசுந்தரிசமேத ஆனந்த நடராஜர் மூலவருக்கு மகாஅபிஷேகம் நடந்தது.
அடுத்ததாக 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி சேவை நடைபெற்றது. பிறகு கோவில் பந்தலில் ஆனந்த நடராஜருக்கு 2 டன் மா, பலா, வாழை ஆகிய பழங்களால் சிறப்புஅபிஷேகம், ஆராதனை நடந்தது. தங்கக் கவச அலங்காரத்தில் ஆனி திருமஞ்சன தரிசனமும், மகா தீபாராதனையும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பெரும்பாலான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.