ஆன்மீக அரசியலுக்கு விடை கொடுத்த ரஜினி ஆன்மீக பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார்.
என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. முடிவு பற்றி அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என்று அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆன்மீக அரசியலுக்கு விடை கொடுத்துவிட்ட ரஜினி, ஆன்மீக பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் உடல்நிலை தேறுவதற்காக, நமோ நாராயண சுவாமிகள் அவரது வீட்டிற்கு சென்று, ஸ்படிக மாலையை அணிவித்தார். ரஜினிக்கு உடல்நிலை தேறியதும் இமயமலைக்கு ஆன்மீக பயணம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.