ஆன்லைனில் கடன் தருவதாக கூறி பெண்ணிடம் பண மோசடி .
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி பகுதியில் வாழ்ந்து வருபவர் லட்சுமி. சென்ற சில மாதங்களுக்கு முன்பாக இவரின் தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்திருக்கிறது. அதில் ஆன்லைனில் கடன் பெற விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என வந்ததால் அப்போது அவருக்கு பணத்தேவை இருந்ததை தொடர்ந்து அந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். தொலைபேசியில் பேசிய அந்த நபர் 3 லட்சம் ரூபாய் கடனாக தருவதாக கூறியுள்ளார்.
கடன் தருவதற்கு ஆவண செலவு, வரி, முன்தொகை என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தைக் கூறி பணம் அனுப்பும் படி கூறியதையடுத்து பணம் கேட்டதால் லட்சுமி முதலில் தயங்கிய நிலையில் அவர் கடன் தொகையுடன் சேர்த்து முன் பண தொகையையும் சேர்த்து தருவதாக வாக்களித்ததால் பணத்தை செலுத்தினார் லட்சுமி. இது போல இவர் 4 லட்சத்து 20 ஆயிரம் வரை செலுத்தியும் கடன் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.