தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகள் திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளன. அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அரியர் மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே தேர்வு நடைபெறும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 12.94 லட்சம் கலைக்கல்லூரி மாணவர்களும், 1.97 லட்சம் பாலிடெக்னிக் மாணவர்களும், 52.301 பல்கலை மாணவர்களும், 4.57 லட்சம் பொறியியல் மாணவர் களும் ஆன்லைன் மூலம் தேர்வு எழுத உள்ளனர். கடந்த ஆண்டு நடந்த ஆன்லைன் தேர்வில் 10 வருடமாக அரியர் வைத்த மாணவர் கூட தேர்ச்சி பெற்றனர். அதனைப் போலவே இந்த ஆண்டும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு செம வாய்ப்பு அமைந்துள்ளது.
மேலும் கல்லூரி மாணவர்கள் வாட்ஸ்அப், மின்னஞ்சல் வழியாக அனுப்பும் விடைத்தாள்களும், அஞ்சலில் அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும் என்று உயர் கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது.