சென்னையில் உள்ள ஆவடி அருகே கோவில் பதாகை பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்பிஏ பட்டதாரியான சந்தியா என்ற மனைவி இருக்கிறார். இவர் கடந்த மே மாதம் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்காக ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். அப்போது வீட்டில் இருந்தபடியே சோப் பேக்கிங் செய்யும் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அந்த வேலைக்கு ரூபாய் 5000 முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் எனவும் போடப்பட்டுள்ளது. அதன்பிறகு விளம்பரத்தில் இருந்த நம்பருக்கு சந்தியா செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அந்த நபர் வேலையில் சேர முன்பணமாக ரூபாய் 5000 செலுத்த வேண்டும் என கூறவே, அதை நம்பி சந்தியாவும் ரூபாய் 5000 செலுத்தியுள்ளார். இதனையடுத்து 20 நாட்கள் கழித்து அந்த மர்ம நபர் சந்தியாவிற்கு மீண்டும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்களுக்கு அதிர்ஷ்ட லாட்டரி சீட்டு மூலமாக ரூபாய் 60 லட்சம் பணம் கிடைத்துள்ளது எனவும் அதற்கு வரியாக 7.5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அதன் அவர் கூறியுள்ளார்.
இதை நம்பிய சந்தியாவும் முன்பின் தெரியாத ஒருவரின் வங்கியை கணக்கிற்கு தன்னுடைய நகைகளை அடகு வைத்தும் உறவினர்களிடம் கடன் வாங்கியும் 6 லட்ச ரூபாயை அனுப்பியூள்ளார். இதனையடுத்து அந்த நபருக்கு சந்தியா மீண்டும் செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு பணம் குறித்து விவரத்தை கேட்கவே, செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்தியா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை கைது செய்தனர். மேலும் இவர் போலியாக வர்த்தக செயலி ஒன்றினை தொடங்கி வேலைவாய்ப்பு தருவதாக கூறி பண மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நபரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.