தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணம் என்பது மிகவும் எளிய முறையில் நடைபெற்று வருகின்றது. ஏனெனில் கொரோனா காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு திருமணத்திலும் குறைந்தபட்சம் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென்று தெரிவித்துள்ளது. தற்போது திருமண மண்டபம், கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள காரணத்தினால் அவரவர் இல்லத்திலேயே திருமணத்தை நடத்திக் கொள்கின்றனர். அப்படி இருக்கையில் திருமண பதிவு சான்றிதழ் எப்படி வாங்க முடியும். இதனை ஆன்லைனிலேயே நாம் பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம். அது எப்படி என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தேவையான ஆவணங்கள்
கணவன் மற்றும் மனைவியின் முகவரிச் சான்று
கணவன் மற்றும் மனைவியின் ஆதார் அட்டை
கணவன் மற்றும் மனைவியின் பிறப்புச் சான்று
சாட்சி நபரின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை
விண்ணப்பிக்கும் முறை
முதலில் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தில் பயனர் பதிவு என்ற வசதியின் மூலம் உள்நுழையவேண்டும். உள்நுழைந்ததும் பதிவு செய்தல் பகுதிக்குச் சென்று திருமணப்பதிவு கிளிக் செய்யவேண்டும். இதில் பல பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் எதற்கு தகுதியுடையவறோ அதனை கிளிக் செய்ய வேண்டும்.
எந்த பிரிவை கிளிக் செய்கிறோமோ அது தொடர்பான விவரங்கள் காண்பிக்கும். அதைப் படித்தபின்னர் பதிவு செய்தலுக்கு தொடர்க என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
தற்போது விண்ணப்பப் பகுதி திறக்கப்படும். இதில் முதலில் கணவரின் விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் மனைவியின் விவரங்களை நிரப்ப வேண்டும்.
தொடர்ந்து சாட்சியாளர்களின் விவரங்களை நிரப்ப வேண்டும். அடுத்து கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். பதிவேற்றிய பின்னர் உடன் சேர்க்க என்பதனை கிளிக் செய்யவேண்டும். அப்போது உங்களுக்கான பதிவு எண்ணுடன் உங்கள் விண்ணப்பம் காண்பிக்கப்படும். ஏதேனும் மாற்றம் செய்யவேண்டும் என்றால் திருத்துக எனக் கொடுத்து திருத்தம் செய்துக்கொள்ளலாம்.
இல்லையெனில் கட்டணம் செலுத்தும் பக்கத்திற்குச் சென்று கட்டணத்தை செலுத்தி சமர்பிக்க என்ற ஆப்சனை தேர்வு செய்யவேண்டும். இப்போது பிடிஎஃப் வடிவில் உங்களது விண்ணப்பம் கிடைக்கும். இதனை பிரிண்ட் செய்து கணவன் மற்றும் மனைவியின் புகைப்படங்களை ஒட்டி இருவரும் கையொப்பமிடவேண்டும்.
அதன்பிறகு மீண்டும் திருமணப் பதிவு என்றபகுதிக்குச் சென்று உங்களது விண்ணப்பத்தை தேடவேண்டும். இதில் உங்களது விண்ணப்பத்தை கிளிக் செய்து சார்பதிவாளர் அலுவலகத்திற்கு எப்போது செல்கிறீர்கள் என்பதை நிரப்பவேண்டும். அதில் ஒதுக்கீடு நேரத்தில் எந்த பகுதியில் செல்கின்றீர்கள் போன்றவற்றை தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னர் ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் அலுவலகத்திற்குச் செல்லவேண்டும். அங்கு அதிகாரி உங்களது ஆவணங்களை சரிபார்த்து உங்களுக்கான சான்றிதழை வழங்குவார்.