ஆன்லைன் மூலம் பணத்தை அபேஸ் செய்தவர்களிடமிருந்து இதுவரை ரூ 6,14,000 புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்டு கொடுத்தனர்.
புதுக்கோட்டையில் வசித்து வருபவர் பிரபாகரன்.இவருடைய செல்போனிற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து அனுப்பியதாக பொய்யான மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதை உண்மை என்று நம்பிய பிரபாகரன் அந்த மெசேஜில் உள்ள லிங்கை கிளிக் செய்து தனது வங்கி கணக்கு, ரகசிய எண் அனைத்தையும் பதிவு செய்தார். இதனை அடுத்து மர்ம நபர்கள் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ 1,23,000 எடுத்துவிட்டார்கள்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் உடனே புதுக்கோட்டை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மர்ம நபர்களின் வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த எண்ணிலிருந்து ஆன்லைன் நிறுவனத்தில் லேப்டாப், செல்போன்கள் உட்பட பல பொருட்கள் ஆர்டர் செய்தது தெரியவந்துள்ளது.
அதன்பின் ஆன்லைன் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்து அந்த பணத்தை முடக்கம் செய்து பிரபாகரனின் ரூ 90,000 பணத்தை மீட்டு கொடுத்தனர். மேலும் மோசடி செய்த மர்ம நபர்களை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மீட்கப்பட்ட பணம் தொடர்பான ஆவணத்தை பிரபாகரனிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கொடுத்தார். அப்போது சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தார்கள்.
ஆன்லைன் மூலம் பணத்தை அபேஸ் செய்தவர்களிடமிருந்து இதுவரை ரூ.6,13, 909 யை புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. சைபர் குற்றங்களால் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் 1930 என்ற உதவி மைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு வராமல் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கலாம் என்று காவல்துறையினர் கூறினார்கள்.