கல்லூரி மாணவியிடம் நைசாக பேசி நகை மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் மணிமுத்தாறில் உள்ள கல்லூரி மாணவியுடன் ஆன்லைன் விளையாட்டு மூலம் நண்பராகியுள்ளார். இருவரும் தொடர்ந்து நட்புடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் கல்லூரி மாணவியின் தோழிக்கு பணம் தேவைப்பட்டதால் தனது தங்க சங்கிலியை அடகு வைத்து தருமாறு ரங்கராஜனிடம் கேட்டுள்ளார். அதனால் கல்லூரி மாணவியிடம் இருந்து சங்கிலியை பெற்றுக் கொண்டு சென்ற ரங்கராஜன் அடகு வைத்து பணத்தினை மாணவியின் தோழியிடம் கொடுக்காமல் தனது மனைவியின் மருத்துவ செலவிற்கு செலவாகி விட்டதாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேலும் மனைவியின் மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்படுகிறது என்று கூறி மாணவியின் கம்மலையும், மோதிரத்தையும் பெற்றுள்ளார். மாணவி அடகு வைத்த நகையை திருப்பித் தருமாறு ரங்கராஜனிடம் கேட்டதையடுத்து , ரங்கராஜன் சரிவர பதில் கூறாமல் இருந்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த மாணவி பெற்றோர்களிடம் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் ரங்கராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளார்கள்.