ஆன்லைன் மூலம் பெண்ணிடம் 2 3/4 லட்சத்தை மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடி பகுதியில் வாழ்ந்து வரும் 28 வயதுடைய பெண்ணிடம் ஆன்லைன் வழியாக அறிமுகமான ஆசாமி ஒருவர் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் விற்பனை செய்து லாபம் ஈட்டலாம் என அடிக்கடி பேசி அந்த பெண்ணிடமிருந்து 2 3/4 லட்சத்தை வெவ்வேறு தவணைகளாக பெற்றுக்கொண்டு பெண்ணை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதுபற்றி ஏமாந்த அந்தப் பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணுக்கு வந்திருந்த தொலைப்பேசி எண்ணை கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த மோசடி செய்த நபர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் மடத்துபட்டியில்உள்ள காளிமுத்து மற்றும் மன்னவன் ஆகிய 2 பேர் என தெரியவந்தது. இதனால் போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்த ஒரு கணினி மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியான சோமசுந்தரம் என்பவர் துபாயில் இருப்பதால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு இருக்கிறார்கள்.