தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து வங்கி ஊழியர் முதல் சாமானியர்கள் வரை தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். நேற்று திருச்சியை சேர்ந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையில் இந்த விளையாட்டை தடைசெய்ய கோரி தமிழக அரசிடம் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்தது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் செம்மைப்படுத்தப்பட்டு, சென்ற செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது.
அதன்பின் இந்த அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதுமட்டுமின்றி இந்த அவசர சட்டத்துக்கு தமிழ்நாடு ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது. அந்த வகையில் ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசு இயற்றிய அவசர சட்டம் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அந்த அவசர சட்டத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்ற 7ம் தேதி ஒப்புதல் வழங்கினார். இந்த நிலையில் இன்று கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடைவிதித்து சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.
சட்டத் துறை அமைச்சர் ரகுபதி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுகுறித்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இம்மசோதாவானது குரல் வாக்கெடுப்பு வாயிலாக ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி, ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவோருக்கு சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். நேரடியாக மற்றும் மறைமுகமாக ஊடகங்களிலும், செயலிகளிலும் இதுகுறித்த விளபரங்களை வெளியிட தடைவிதிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை கண்காணிக்கவும், விதிமுறைகளை மீறினால் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கவும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட இருக்கிறது. முன்பாக ஆன்லைன் ரம்மியின் தாக்கம் பற்றி ஆய்வு மேற்கொள்ள ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது.
அந்த குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநரான டாக்டர் சங்கரராமன், சினேகா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே போன்றோர் இடம் பெற்றனர். அதனை தொடர்ந்து நீதிபதி சந்துரு தலைமையிலான அக்குழு, ஆன்லைன் விளையாட்டுகள் திறன்கள், அதனால் ஏற்படும் தீமைகள், ஏற்படும் நிதியிழப்பு என்னென்ன என்பது பற்றி ஆய்வு செய்தது மட்டுமின்றி, ஆன்லைன் விளையாட்டுகளில் பணபணப்பரிவர்த்தனை எந்தளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டது. ஆன்லைன் ரம்மி தடைசட்ட மசோதவை உருவாக்குவதற்குரிய காரணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் தன் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.