ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்..
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.. அவசர சட்டத்திற்கு 6 மாதங்களும், சட்ட மசோதாவிற்கு 6 வாரத்திற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில், ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்ட மசோதாவின் காலம் 27ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இந்தநிலையில், ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கப்படும் என சட்டத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அவசர சட்டத்தில் என்ன அம்சம் இருக்கிறதோ? அதையேதான் சட்ட மசோதாவில் குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்தது. ஆனால் ஏன் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவித்தனர்.
ஏற்கனவே இது தொடர்பான சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு இந்த விவகாரத்தில் சந்தேகம் இருக்காது, இருக்கும் பட்சத்தில் அதற்கான விளக்கத்தை தருவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். நிலையில் ஆளுநரை சந்திப்பதற்கான நேரமும் கேட்கப்பட்டு அதுவும் இன்னும் கிடைக்காத நிலையில் கவர்னர் தற்போது விளக்கம் கேட்டுள்ளார்.