ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு கடிதம் மூலமாக பதில் அளித்துள்ளது தமிழக அரசு.
ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சட்ட மசோதாவை நிறைவற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இந்த நிலையில் ஆளுநர் இது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் தான் தமிழக அரசு அதற்கு உரிய சட்ட விளக்கங்களுடன் ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது..
ஆன்லைன் ரம்மி விவகாரத்தை பொருத்தவரை உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதையடுத்து அதற்குரிய சட்டம் கொண்டு வருவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து அது தொடர்பான அறிக்கையும் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் தான் இதற்கு முன்பாகவே தடை சட்டம் கொண்டுவரப்பட்டாலும் நீதிமன்றத்திற்கு செல்லும் போது எவ்விதமான பிரச்சனையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அனைத்து விதமான கருத்துகளையும் பரிசீலனை செய்து அவசர சட்டமானது கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் கடந்த அக்.,19 ஆம் தேதி கூடப்பட்டதும் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு பேரவையில் ஒருமனதாக ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் இதுபோன்ற 40 நாளை நெருங்கக்கூடிய நிலையில் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்..
மேலும் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்திப்பதற்கான கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டது. இந்நிலையில் தான் ஆளுநர் ரவி நேற்று ஆன்லைன் சட்டமசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகள் விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? எனவும் மற்றும் ஒரு சில சட்ட விளக்கங்கள் தொடர்பாக விளக்கத்தை கேட்டிருக்கிறார்..
இந்நிலையில் இது தொடர்பாக ஆலோசித்து சட்டத்துறை மூலமாக தமிழக அரசு ஆளுநருக்கு பதிலை அனுப்பி வைத்துள்ளது. இந்த பதில்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்கும் சூழ்நிலையில் ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேலாக எவ்விதமான உயிரிழப்புகளும் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்டுவிடக்கூடாது என தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது..