ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலரும் தங்கள் ஸ்மார்ட்போனின் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். குறிப்பாக பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளில் ஏராளமானோர் ஈடுபட தொடங்கினர். அவற்றில் ஒன்றான ஆன்லைன் ரம்மி இதுவரை பலரது உயிரை காவு வாங்கியுள்ளது. தொடர்ந்து ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் மனது வெறுத்து தற்கொலை செய்யும் முடிவை எடுத்து விடுகின்றனர்.
அவ்வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மதன்குமார் என்பவரும் ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கியுள்ளார். கடன் வாங்கிய பணத்தை விளையாட்டில் போட்ட அவர் மொத்தமாக இழந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மதன்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தூக்குமாட்டி தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து கடந்த 10 நாட்களில் மட்டும் மூன்று பேர் தற்கொலை செய்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.