தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு குழு உருவாக்கப்படும். குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும். குறைகளைத் தீர்க்க ஹெல்ப்லைன் எண், மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும். ஆன்லைன் வகுப்பில் கண்ணியமான உடை அணிய வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.