பணத்தை திரும்ப செலுத்தாத பள்ளி நிர்வாகம் 1 லட்ச ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு காந்தி கிராமத்தில் தீபன்-ஐமுனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதுடைய மித்திரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மித்ரனை அவரது தாத்தா பொன்னுராஜ் கரூரில் உள்ள ஒரு அட்ரியன் பள்ளியில் சேர்த்தார். இதற்காக ஐமுனா 38 ஆயிரம் ரூபாய் பணத்தை கடந்த 27.5.2020 அன்று ஆன்லைன் மூலம் செலுத்தினார். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் கடந்து 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆன்லைன் வகுப்பு தொடங்கும் என கூறினர்.
ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வகுப்பு தொடங்கவில்லை. இதுகுறித்து பொன்னுராஜ் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அப்போது பள்ளி நிர்வாகிகள் பொன்னுராஜிடம் கடுமையாக நடந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொன்ராஜ் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தான் செலுத்திய 38 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப தர வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ஏ. எஸ். ரத்தினசாமி ஆகியோர் பள்ளி நிர்வாகம் 27.5.2020 அந்த தேதியிலிருந்து 6 சதவீத வட்டியுடன் 38 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க வேண்டும். மேலும் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும், சேவை குறைபாட்டிற்காகவும் 1 லட்ச ரூபாயை 7.5 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
.