கொரோனாவால் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி தடைபட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மரத்தின் உச்சியில் ஏறி கல்வி கற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் மாணவர்கள்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுக்காவில் 200க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை கொண்டது கடமலை, மயிலை ஒன்றியம். தனியார் பள்ளிகளில் பயின்று வரும் இந்த கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தினசரி 3 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. செல்போன் சிக்னல் கிடைக்காததால் மலையின் உச்சிக்குச் சென்றும். மரத்தின் மீது ஏறியும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மாணவர்கள். கடமலை, மயிலை ஒன்றிய பகுதிகளில் செல்போன் சிக்னல் கிடைக்கும்படி கூடுதல் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டால் மட்டுமே குழந்தைகள் படிப்பைத் தொடர முடியும் என்கின்றனர் கிராம மக்கள்.
இதேபோல் நெல்லை அம்பாசமுத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட மாஞ்சோலை, நாலுமுக்கு உள்ளிட்ட மலை கிராமங்களிலும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர்.BSNL மூலமாக இந்த மலை கிராமங்களில் 2G இணைய சேவை மட்டுமே கிடைப்பதால் தங்களுக்கு 4G இணைய சேவை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.