தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து 6 1/2 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலிகோனாம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆன்லைனில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என குறிப்பிட்டு இருந்தது. இதனை பார்த்த பிரவீன்குமார் 1000 ரூபாய் முதலீடு செய்த சிறிது நேரத்தில் அவருக்கு 1200 ரூபாய் கிடைத்தது. அந்த நிறுவனத்தில் இருந்து பேசிய சில நபர்கள் அதிக தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினர்.
இதனை நம்பி பல்வேறு தவணைகளாக பிரவீன் குமார் 6 லட்சத்து 59 ஆயிரம் வரை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த நபர் கூறியபடி பிரவீன்குமாருக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரவீன் குமார், கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.