வாகனங்கள் மோதி பள்ளத்தில் இருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்த விபத்தில் ஓட்டுநர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரளா எல்லையான புளியரை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. அங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் ஆபத்தான எஸ் வளைவு அமைந்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து சிமெண்ட் ரோடு இறக்கிவிட்டு நேற்று மாலை லாரி தமிழகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல் கோவில் கொடை விழாவுக்கு வாடகை பாத்திரங்கள் ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ சென்றது.
இந்நிலையில் எஸ் வளைவு பகுதியில் சென்ற போது லோடு ஆட்டோவும், லாரியும் மோதியதோடு நிலைதடுமாறி மலையில் இருந்து சுமார் 40 அடி ஆழ பள்ளத்தில் இருக்கும் செங்கோட்டை- கொல்லம் இடையிலான ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் வாகன ஓட்டுனர்களான வையாபுரி, முருகன் ஆகிய இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இரண்டு ஓட்டுனர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கிரேன் மூலம் தண்டவாளத்தில் விழுந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. அந்த நேரம் தண்டவாளத்தில் ரயில் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.