வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தை காலனியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான பாரதிதாசன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மணிவண்ணன் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு பாரதிதாசன் தனது தம்பி பாண்டியராஜ் என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மணிவண்ணனின் உறவினர்களான சுபாஷ் , ஆசைத்தம்பி ஆகியோர் பாண்டியராஜை ஆபாசமாக திட்டி தாக்கியதை பாரதிதாசன் தட்டி கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாரதிதாசனை குத்தி கொலை செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுபாஷ் , ஆசைத்தம்பி, மணிவண்ணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்து நீதிமன்றம் சுபாஷுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் ஆசைத்தம்பிக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மணிவண்ணன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இதனால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.