முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாத்தாவும், அதே பகுதியில் வசிக்கும் திருமண புரோகரான பழனிசாமி(65) என்பவரும் ஒன்றாக அமர்ந்து டிவியில் படம் பார்ப்பது வழக்கம். தனது தாத்தாவோடு சிறுமி அடிக்கடி பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்ற டிவி பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் தாத்தா வீட்டை விட்டு வெளியே சென்ற நேரத்தில் பழனிச்சாமி சிறுமிக்கு டிவியில் ஆபாச படத்தை போட்டு காண்பித்துள்ளார். மேலும் சிறுமி படிக்கும் பள்ளிக்கு அருகே சென்று சில மாணவிகளிடம் பழனிசாமி தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போது சிறுமி உட்பட சில மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் பழனிச்சாமி குறித்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்திய போது பழனிச்சாமி மாணவிகளிடம் தவறாக பேசியதும், ஆபாச படத்தை போட்டு காண்பித்ததும் உறுதியானது. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.