ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் ஹெராத் நகரில் இன்று உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாகாண ஆளுநரின் இல்லத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது கல்வி எங்களின் உரிமை என முழக்கங்கள் எழுப்பிய படி சென்றுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் கலந்து செல்லாததால் பாதுகாப்பு படையினர் தண்ணீரை அவர்கள் மேல் பீய்ச்சியடித்து விரட்டி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வீதியிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.