ஆப்கானிஸ்தானில் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு சாதகமாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்தப் போரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் அந்த நாட்டின் ஹர் மாகாணம் டாலெட் யார் மாவட்டத்தில் இருக்கின்ற சாலைப் பகுதியில் பயங்கரவாதிகள் கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளனர். அச்சமயத்தில் சாலையில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி பகுதியை ஒரு கார் கடந்ததால் திடீரென கண்ணிவெடி வெடித்தது. அந்த விபத்தில் காரில் பயணம் செய்த அப்பாவி பொதுமக்கள் 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கர கண்ணிவெடித் தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் தான் நடத்தி இருப்பார்கள் என்று ஆப்கானிஸ்தான் காவல்துறையினர் கூறியுள்ளனர்.