ஆப்கானிஸ்தான் அமைதி குழுவை சேர்ந்த பெண் உறுப்பினர் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையில் 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா சாதகமாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் பலனாக கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அமெரிக்க அரசு மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியது. அதன் பின்னர் தலிபான் பயங்கரவாத அமைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆப்கானிஸ்தான் அரசு சார்பாக 21 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தின் முன்னாள் தலைவர் முகமது தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழுவில் முன்னாள் எம்பியும், சமூக ஆர்வலருமான பாவ்ஷியா கூபி உள்ளிட்ட சில பெண் தலைவர்களும் இருக்கின்றனர். கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இந்த குழு அமைக்கப்பட்ட நிலையில் தற்போது வரை தலிபான் பயங்கரவாதிகளுடன் இந்த குழு அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவியதால் அமைதிப் பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது. தற்போது அந்த தடை நீங்கி, அடுத்த வாரத்தில் பேச்சு வார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமைதிப் பேச்சு வார்த்தைக் குழுவில் உறுப்பினராக இருக்கும் பாவ்ஷியா கூபி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அவர் காரில் சென்று கொண்டிருந்த போது, அவரின் காரை வழி மறித்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர். அந்த தாக்குதலில் அவரும், அவருடன் சென்றிருந்த அவரின் சகோதரியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். ஆனால் பாவ்ஷியா கூபி வலது கையில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் இது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய காயங்கள் இல்லை என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் அந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்ற தலிபான் பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சாளர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இதுபற்றி ஆப்கானிஸ்தானுக்கு என அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி சல்மே கலீல்சாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஆப்கானிஸ்தானில் அமைதிப் பேச்சாளர் மீது குறிவைத்து நடத்தப்பட்ட கொலை முயற்சியை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானின் அமைதி நடவடிக்கையை தாமதமாக்கவும் சீர்குலைக்க முயற்சி செய்பவர்களின் கோழைத்தனமான செயல். தாக்குதலுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பது மட்டுமல்லாமல் சமாதான முன்னெடுப்புகளை துரிதப்படுத்தவும் நான் அழைப்பு விடுக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.