ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் எல்லையை தாண்டிய தாக்குதல்களை தடுப்பதற்காக தங்களின் எல்லை பாதுகாப்பை மேம்படுத்த நிதி வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. மேலும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ இதனை கூறியுள்ளார்.
சமீபத்தில் பிலாவல் பூட்டோ அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். அப்போது அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி உட்பட ஜனாதிபதி ஜோபைடன் நிர்வாகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது குறித்து நேற்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியபோது, 2023 -இல் வழங்கப்படும் எல்லை பாதுகாப்பு நிதி குறித்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்களில் இரண்டு மூத்த உறுப்பினர்கள் 2023 -ஆம் ஆண்டுக்கான அமெரிக்க பட்ஜெட்டில் பாகிஸ்தானின் எல்லை பாதுகாப்புக்கு உதவுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டதாக என்னிடம் கூறியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.