ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியில் மதரீதியான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்ற 2021ஆகஸ்ட் 15-ஆம் தேதி காபூலை தலிபான்கள் ஆக்கிரமித்த பிறகு ஆப்கானிஸ்தான் முழுதும் இஸ்லாமிய மதச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர். கடந்த வருடம் ஆகஸ்ட்டில் மூடப்பட்ட பெண்களுக்கான பள்ளிகள் எதுவும் இதுவரையிலும் திறக்கப்படவில்லை. இதையடுத்து பல்கலைகழகங்களில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதன்பின் மார்ச் 27ம் தேதி பூங்காக்கள், பொதுயிடங்கள் ஆகியவற்றில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாகஉட்கார்ந்து பேசுவதற்கு தலிபான் அரசு தடைவிதித்தது.
ஆப்கான் அரசுத்துறைகளில் பணியாற்றும் அனைத்து ஆண்களும் இஸ்லாமிய முறையின் அடிப்படையில் தாடி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அண்மையில் ஆணையிடப்பட்டுள்ளது. தாடி வைத்துக் கொள்ளாதவர்களும் இஸ்லாமிய முறைப்படி பாரம்பரியம் ஆடைகளை அணியாதவர்களும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தலிபான் அரசு அறிவித்து இருக்கிறது. 3ஆம் பாலினத்தவர் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான தாக்குதல்கள் அடக்குமுறைகளை தலிபான் இயக்கத்தினர் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இதனிடையே ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை மோசமடைந்து இருப்பதால் பெற்றோர்கள் தமது குழந்தைகளை விற்பது, பணத்திற்காக சிறுநீரகத்தை விற்பது ஆகியவை அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.