புத்தக கண்காட்சியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள காபூல் பல்கலைக்கழகத்தில் நேற்று புத்தக கண்காட்சி நடைபெற்றது. அச்சமயம் அங்கு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தி துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவீசி சிலர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 40 பேர் படுகாயமடைந்து 20 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் பற்றி நல்லிணக்கத்திற்கான உயர்சபைத் தலைவர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “பல்கலைக்கழகத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். கல்வி நிறுவனங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கொடூரமானது.
பாதுகாப்பாகவும் அமைதியாகவும் படிப்பதற்கான உரிமை மாணவர்களுக்கு உண்டு. இந்த கொடூர சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.