ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் இயந்திர ஆபரேட்டர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட நீர் நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்றுமாறு அதிரடியாக உத்தரவிட்டது. அதன்படி கடந்த சில நாட்களாக 4 1/2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் 66 கடைகளை அகற்றும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. நேற்று 3 நவீன ரக எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு வருவாய் துறையினர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக வளாகங்களை இடித்து அகற்றும் பணி நடைபெற்றுள்ளது.
அப்போது சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வாகன ஆபரேட்டர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்த அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.