சேலத்தில் திருமணம் செய்த பெண் முதலிரவன்றே வீட்டில் உள்ள பணம், நகையுடன் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் கோரணம் பட்டி ஊராட்சியில் உள்ள சாணாரப்பட்டியில் லாரி ஓட்டுனரான செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கின்ற நிலையில் கடந்த 11 மாதத்திற்கு முன் அவரது மனைவி இறந்துவிட்டார். இதனால் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக ஜோடி ஆப்பில் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் அதே ஜோடி ஆப்பில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த கவிதா என்ற பெண்ணும் பதிவு செய்திருக்கின்றனர். இதனை அடுத்து அவர்கள் இரண்டு பேரும் செல்போனில் பேசி வந்ததாகவும் அப்போது கவிதா தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும் செந்தில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி தேவைப்படும்போது செந்தில் இடமிருந்து பணத்தை சுருட்டியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி செந்தில் சேலம் வந்த கவிதாவை அங்குள்ள சிவன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு எடப்பாடி சாணாரப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது முதலிரவன்றே நாலரை பவுன் தங்கம்,வெள்ளி கொலுசு, ரொக்க பணம் என ரெண்டு லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு கவிதா தப்பி சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து செந்தில் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கவிதா தொடர்பில் இருந்து இரண்டு வழக்கறிஞர்கள் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் ஆஜராகி செந்திலிடம் பணம் நகையை திருப்பித் தருவதாக கூறி சமாதானம் செய்துவிட்டு எதுவுமே திருப்பித் தராமல் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்ததன் பேரில் நேற்று கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் செந்தில் பேசும்போது என்னிடமிருந்து கவிதா திருடி சென்ற பணம் நகைகளை திரும்ப பெற போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஏமாற்றிய பெண் பேசிய ஆடியோ மற்றும் புகைப்படம் வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பிய ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.