திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அதன்பின் சென்னைக்கு செல்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளார்கள். நாங்களும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். திமுக ஆட்சியில் எப்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதோ அதே போன்றுதான் நியாயமற்ற முறையில் கூட்டுறவு சங்க தேர்தலும் நடைபெறும். அதன்பின் செய்தியாளர் ஒருவர் புதுமைப்பெண் திட்டத்திற்கு எம்.பி ரவீந்திரநாத் ஆதரவளித்தது குறித்து கேட்டார். அதற்கு எடப்பாடி, நான் ஏற்கனவே பலமுறை கூறியிருப்பேன். அவர்களுக்கு திமுகவுடன் தொடர்பு இருக்கிறது என்பதை, தற்போது நேரடியாகவே வெளிப்படுத்தி விட்டார்கள் அவ்வளவுதான் என்றார்.
இதனையடுத்து இலவச திட்டங்களால் எந்த பயனும் இல்லை, நாடு வளர்ச்சி அடையாது என்று பிரதமர் கூறியிருக்கிறாரே இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எடப்பாடியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த இபிஎஸ், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அது அவர்களுடைய கட்சியின் நிலைப்பாடு. அதிமுக கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது என்று சமாளித்தார். அயோத்தியில் ராமபிரான் கோவில் கட்டுவதற்கு தமிழகத்தில் இருந்து தான் அதிக நிதி கொடுத்துள்ளதாக அண்ணாமலை கூறினாரே என்ற கேள்விக்கு, அது அவர்களுடைய சொந்த விருப்பம். என்னை பொருத்தவரை ஆன்மீகம் மட்டும் தான். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அவரவர்களுக்கு அவரவர் மதம் பெரிது.
அந்தந்த தெய்வம் புனிதமானது. நான் எல்லா சாமியும் கும்பிடுவேன். என்னைப் பொறுத்தவரை எல்லா மதமும் ஒன்றுதான் என்றார். இதைத்தொடர்ந்து பேசிய இபிஎஸ், தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதை அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. நாங்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் அதற்கு மக்களிடம் போய் கருத்து கேட்கிறது இந்த அரசு. நாங்க கொண்டு வந்தது தான் சாலைகள், பாலங்கள் திட்டம் எல்லாம். கொள்ளிடம் அணை நாங்கள் போட்ட திட்டம். இதற்கும் ரிப்பன் கட் செய்து அவர்கள் தான் திறந்து வைப்பார்களாம் என்று கேலியாக கூறினார்.