மதுரையில் உள்ள காளவாசல் பைபாஸ் பகுதியில் ஒரு தனியார் விடுதி அமைந்துள்ளது. இங்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டுகள் சாதனை கால விளக்க புத்தகத்தை வெளியிட்டார். அதன்பின் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களை தமிழில் தொகுத்து பிரதமர் மோடியின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க புத்தகமாக வெளியிடப் பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை கண்டித்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தி வருகிறோம். அறிவிக்கப்படாத மின் துண்டிப்புகளால் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இலவச திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர் போன்றவைகள் பெரும்பாலான மக்களின் வீடுகளில் பயனற்று கிடக்கிறது. மின்சாரத்துறை நிர்வாக சீர்கேடுகள் நிறைந்ததாகவும், ஊழல் வாரியமாகவும் திகழ்கிறது. ஆவின் பால் பொருட்களின் விலையை அதிகரித்ததோடு, தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களின் கவனத்தை திமுக அரசு திசை திருப்புகிறது. அதாவது ஆ. ராசாவை வைத்து இந்து மக்களுக்கு எதிராக அவதூறு பேசி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது திமுக. ஆ ராசாவின் சான்றிதழில் இந்து என்று தான் இருக்கிறது. இந்து என்ற பெயரில் அரசின் சலுகைகளை பெற்று விட்டு இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கண்டிக்கத்தக்கது.
அவரை திமுகவிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும். நரிக்குறவர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசின் உயரிய பதவிகளில் பழங்குடியின மக்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து சட்டசபையில் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதிலிருந்து தமிழக போலீசாருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் நிலவுகிறது என்பது தெரிகிறது. இந்த திமுக அரசு வளர்ச்சி திட்டங்களுக்கு தடையாகவும், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவினை சக்திகளுக்கு எதிராக பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தமிழகத்தில் போட்டியிட வேண்டும்.
அதிலும் குறிப்பாக ராமேஸ்வரத்தில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வன்முறையை ஏற்படுத்தும் திமுகவுக்கு ஸ்ரீரங்கத்தில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் உலக அளவில் முதலிடம் பிடித்தது பெருமை குறியது. அதானி குடும்பத்தினர் உண்மையான தேச பக்தி கொண்டவர்கள். மோடிக்கு நெருக்கமானவர்கள் தான் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள் என்பது இடதுசாரி கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம். இது அம்பானி, அதானி ஆட்சி என்று சொல்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வெளிநாட்டைச் சேர்ந்த கம்பெனிகள் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு உள்நாட்டைச் சேர்ந்த கம்பெனிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார்.