கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல மாநிலங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு ஓணம் பண்டிகை கொண்டாட சென்றுள்ளனர். ஓணம் கொண்டாடிவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப மக்களுக்கு பேருந்து கட்டணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து சென்னை, பெங்களூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரு மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது ஓணம் பண்டிகைக்காக சொந்த ஊர் வந்தவர்கள், தற்போது ஆம்னி பேருந்துகளின் விலை உயர்வால் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, கன்னியாகுமரியில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் பேருந்துகளின் கட்டணம் அதிக அளவு உயர்ந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து செல்லும் சாதாரண பேருந்துகளின் கட்டணம் ரூ. 500ல் இருந்து ரூ. 1,500 ஆகவும், ஏசி பேருந்துகளின் கட்டணம் ரூ. 1500ல் இருந்து ரூ. 4,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.