பா.ம.க நிறுவனர் ராம்தாஸ் தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்கைக்கு முடிவு கட்ட ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை மதுரைக்கு இன்று பயணிக்க அதிகபட்சமாக ரூ.4999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் தங்களது விருப்பத்திற்கு தகுந்தாற்போல் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும் அதனை அரசு வேடிக்கை பார்த்து வருவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இந்த கட்டண கொள்கை பற்றி யாராவது புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என போக்குவரத்து துறை கூறுவது பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயல். மேலும் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதற்கு மாறாக ஆம்னி பேருந்துகளில் சங்கங்களை கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள போக்குவரத்து துறை அனுமதிப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல். ஆம்னி பேருந்துகள் அதிக லாபம் ஈட்டுவதற்கு பொதுமக்களை கசக்கி பிழிய அனுமதி அளிக்கக்கூடாது எனவும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை பா.ம.க நிறுவனர் ராம்தாஸ் வலியுறுத்தியுள்ளார்.