ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் காயமடைந்த நபரை உடனடியாக மீட்டு காவல்துறையினர் சரக்கு வாகனம் மூலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டை சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நிலைதடுமாறிய முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் எதிரே வந்த சரக்கு வேன் மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த முருகானந்தம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு கால தாமதமானதால் உடனடியாக காவல்துறையினர் முருகானந்தத்தை ஒரு சரக்கு வேனில் ஏற்றி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு முருகானந்தம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு விபத்தில் காயமடைந்தவரை மீட்டு உயிரை காப்பாற்றிய காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.