டீசல் விலையை மத்திய அரசு குறைத்தாலும் சுங்க கட்டணம், டயர் போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் முட்டை விலை அதிகரித்து வருவதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து 4 ரூபாய்.70 காசுகளாக விலை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. கடந்த 4 நாட்களில் முட்டை விலை 25 காசுகள் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சிங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், மூலப்பொருள்கள் விலை உயர்வால் தற்போது முட்டை விலை உயர்ந்துள்ளதாகவும், தற்போது குளிர்காலம் என்பதால் வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரித்து நாளொன்றுக்கு 50 லட்சம் முதல் 1 கோடி முட்டைகள் நாமக்கல்லில் இருந்து அனுப்பப்படுவதாக கூறினார். மேலும் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தாலும் சுங்க கட்டணம், டயர் போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் முட்டை விலை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
முட்டை விலை 5 ரூபாய்க்கு மேலே சென்றால்தான் பண்ணையை ஓரளவுக்கு லாபகரமாக நடத்த முடியும். அவ்வாறு லாபகரமாக நடத்தினால்தான் வங்கிகளில் வாங்கிய கடன்களை தவணை தவறாமல் திருப்பி செலுத்த முடியும். டீசல் விலையானது 10 ரூபாய் குறைத்து தற்போது 91 ரூபாய் அளவில் இருக்கிறது. அதேபோன்று சுங்க கட்டணம் விலை உயர்ந்து இருக்கிறது. மேலும் உற்பத்தி செலவானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் பண்ணையை நடத்துவது மிக சிரமமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.