தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகளின் இளமையான சந்திப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 1975-80 ஆம் வருடம் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படித்து, குடும்பத் தலைவிகளாக, விவசாயிகளாக, தொழிலதிபர்களாக, திரைத்துறை பிரபலங்களாக என பல்வேறு துறைகளில் ஜொலிக்கும் 60க்கும் மேற்பட்டோர், மற்றும் அவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்தோர் எனப் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில், திரைக்கலைஞர், பாடகர், அரசியல்வாதி என புகழ்பெற்ற முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் முக்கியமானவர்.
இந்த பகுதியில் பிறந்து, வளர்ந்து சென்னையில் குடியேறிய, கருணாஸ் தனது நண்பர்கள் மூலம் இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இவ்விழாவில் பங்கேற்ற கருணாஸ், நமக்கு ஆயிரம் நண்பர்கள் இருந்தாலும், பள்ளி, கல்லூரி நண்பர்களைப் போல வராது என்று பெருமிதத்தோடு கூறினார். மேலும், வந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றார்.
இதில், பல முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் பழைய நினைவுகள் பகிர்ந்து கொண்டனர். மேலும், தங்களின் ஆசிரியர்களான சுப்பிரமணியன், ராமையன், சொக்கலிங்கம் ஆகியோருக்கு மாலை, சால்வை அணிவித்து முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர். பின்னர் அனைவருக்கும் சைவ, அசைவ உணவுகள் பறிமாறப்பட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ராஜசேகர், ராஜா, குழந்தைசாமி மற்றும் முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.