மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்கடல் பகுதியில் 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் ஒரு படகு கடந்த வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இப்படகால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து துணை முதல்வரும், உள்துறைக்கு பொறுப்பு வகிப்பவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் சட்டப்பேரவையில் கூறியிருப்பதாவது “ராய்கட்டில் கரை ஒதுங்கிய படகில் பகுதியளவு தானியங்கி ஆயுதங்கள் சில இருந்தது. இந்த படகு ஆஸ்திரேலிய பெண் ஒருவருக்கு சொந்தமானது ஆகும். மஸ்கட்டில் இருந்து ஐரோப்பாவுக்கு அந்த பெண்ணும் அவரது கணவரும் சென்ற ஜூன் மாதம் படகில் பயணம் மேற்கொண்டிருந்தபோது நடுக்கடலில் மோசமான வானிலையைத் தொடா்ந்து என்ஜின் பழுதடைந்தது. அதன்பின் அவர்கள் படகை கைவிட்டனா்.
அடுத்ததாக படகில் இருந்தவா்கள் ஓமன் நாட்டையொட்டிய கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டனா். இந்நிலையில் மோசமான வானிலையில் சிக்கி மிதந்து வந்த அப்படகு, ராய்கட் பகுதியில் கரை ஒதுங்கி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போதைய நிலையில் இவ்விவகாரத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவுமில்லை. எனினும் படகில் ஆயுதங்கள் ஏன் எடுத்துச் செல்லப்பட்டது என்பது தொடர்பாக தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. உள்ளூா் காவல்துறையினரும் பயங்கரவாத தடுப்புபிரிவினரும் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்” என்று அவர் கூறினார். முன்பாக ராய்கட்டின் ஸ்ரீவா்தன் கடல் பகுதியில் ஆள் இல்லாமல் படகு மிதப்பதை பாா்த்த உள்ளூா் மக்கள் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்படி அங்கு விரைந்த கடலோர காவல்படையினா், படகை கைப்பற்றி அதில் சோதனை மேற்கொண்டனா். சேதமடைந்திருந்த அப்படகில் 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தது. விநாயகா் சதுா்த்தி பண்டிகை நெருங்கிவரும் சூழ்நிலையில், இந்த படகால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் அதை கடலோர காவல்படை அதிகாரிகள் மறுத்தனா். ராய்கட்டில் கரையொதுங்கிய படகு பிரிட்டனில் பதிவு செய்யப்பட்டதாகும். அவற்றில் இருந்தவா்கள் சென்ற ஜூன் 26-ஆம் தேதி மஸ்கட்டையொட்டிய கடல் பகுதியில் மீட்கப்பட்டு உள்ளனா். படகில் இருந்த ஆயுதங்களின் வரிசை எண் வாயிலாக அதன் விற்பனையாளரை தொடா்புகொண்டு பேசினோம். இந்நிலையில் அந்த ஆயுதங்கள் தங்களது இருப்பைச் சோ்ந்தவை என்பதை உறுதிப்படுத்தினாா். இவ்விவகாரத்தில் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.