தமிழகத்தில் ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படும் நிலையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், கம்பைநல்லூர், கரூர் பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்த சாமந்திப் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இம்முறை பூக்களின் விலை கடுமையாக அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்று ஒரே நாளில் 60 டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பூக்களின் விலை ஏற்றம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை வெளிப்படுத்தியது. திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் கடைகளில் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பூக்கள், பழங்கள் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதால் மிகவும் குறைந்த அளவிலேயே பொருட்களை வாங்கி செல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தூத்துக்குடியில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு பொறி, அவல், கடலை ஆகியவற்றை தனித்தனி பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் காலையில் இருந்து வாங்கி செல்கின்றனர்.