ஓலா ஸ்கூட்டரின் முன்பதிவு தொடங்கி 24 மணி நேரம் ஆன நிலையில் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இதற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அரசும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அளிக்கின்றது. அண்மையில் அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வாகனங்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது.
பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு தாறுமாறாக ஏறி கொண்டிருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஓலா நிறுவனம் தமிழகத்தில் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையை அமைத்து உற்பத்தி செய்து வருகிறது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு நேற்றைய முன்தினம் தொடங்கப்பட்டது. இதில் முன்பதிவு தொடங்கி 24 மணி நேரத்திற்குள் ஒரு லட்சம் பேர் இந்த ஸ்கூட்டரை புக்கிங் செய்து உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் 499 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த ஸ்கூட்டரால் ஒரே சார்ஜிங்கில் 100 முதல் 150 கிலோமீட்டர் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.