மனிதன் முதன் முதலாகப் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காயும் ஒன்று என்று கூறப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இதைத் தங்கள் உணவில் சேர்த்திருந்ததாகவும் தெரிகிறது.
கோடைக்காலப் பயிராகக் கருதப்படும் அவரைக்காயின் சீசன் பிப்ரவரி முதல் ஜூலை வரை ஆகும். ஆனாலும் அதைக் காய வைத்து, குளிர்காலத்திலும் பயன்படுத்துவார்கள். ஒரு அவரைக்காயில் 25 முதல் 50 விதைகள் வரை இருக்கும். கிட்னி வடிவத்தில் இருக்கும் ஒவ்வொரு விதையின் மேற்புறம் பஞ்சு போல மென்மையாக இருக்கும். அவரைக்காய் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் கொண்டது.
இதயத்திற்கு நல்லது
கால் கப் அவரை காயில் 9 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இதனால் நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் நம் இதயத்திற்கும் மிகவும் நல்லது.
எடை குறைக்க உதவும்
கால் கப் அவரைக்காயில் 10 கிராம் புரதச்சத்து உள்ளது. இதனால், அவரைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது கொலஸ்ட்ரால் அளவுகள் குறைந்து, உடல் எடையும் சரசரவென்று குறைந்து விடுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
அதிக ஊட்டச்சத்து:
அவரைக்காயில் வைட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலியேட், மாங்கனீசு என்று பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்தச் சத்துக்களால் சீரான இரத்த ஓட்டம் முதல் எலும்புகள் வலுவாவது வரை பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.
மன அழுத்தம் போக்க:
அவரைக்காயின் சுவையே தனி. அதில் அதிகமாக உள்ள எல்-டோப்பா என்ற அமினோ அமிலம்தான் அந்தத் தனிச் சுவையைக் கொடுக்கிறது. அந்த அட்டகாசமான சுவை நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்து, மன அழுத்தங்களைப் போக்குகிறது.
பசியைப் போக்கும்:
அவரைக்காயில் கலோரிகளை எரிக்கும் சக்தி அதிகம் உள்ளது. மேலும் அதில் உள்ள புரதச்சத்தும் சேர்வதால், இந்த உணவைச் சாப்பிடும் போது நம் வயிறு நிறைந்த உணர்வு நமக்குக் கிடைக்கும்.
எலும்பு வளர்ச்சிக்கு:
நம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியச் சத்தும் அவரைக்காயில் கணிசமான அளவில் உள்ளது.
மலச்சிக்கலுக்கு:
அவரைக்காயில் உள்ள நார்ச்சத்து, நாம் சாப்பிட்ட உணவுகளைச் சீராக நம் குடல்களின் வழியாகப் பயணிக்கச் செய்து, நன்றாகச் செரிமானம் செய்து, மலச்சிக்கலே இல்லாமல் செய்கிறது.
நோயெதிர்ப்பு சக்தி பெருக:
அவரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் நம்மை அண்டாது. வேறு சில நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.