Categories
மாநில செய்திகள்

“ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு” அம்மையார் போன்று துணிச்சலான முடிவை எடுப்பாரா முதல்வர்….? வலுக்கும் எதிர்பார்ப்பு…..!!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதற்கு நிபந்தனை அடிப்படையில் அனுமதி கொடுத்துள்ளனர். மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி மாநிலம் முழுதும் உள்ள 50 இடங்களில் மாபெரும் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அரசியலமைப்பை சாராத ஒரு அமைப்பு ராணுவ வீரர்களை போன்று சீருடை அணிந்து கொண்டு அணிவகுப்பு நடத்த வேண்டியதன் நோக்கம் என்னஎன்பது தான் தற்போது பலரது கேள்வியாகவும் இருக்கிறது. இதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கலாச்சார ரீதியாக இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதற்காக தான் அணிவகுப்பு நடத்துகிறோம் என்று கூறுகின்றனர். இருப்பினும் அரசியல் பார்வையாளர்கள் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை ஒரு அச்சுறுத்தும் நோக்கமாகவே பார்க்கின்றனர்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வளர்ச்சி குறைவாகவே இருக்கிறது. ஏனெனில் எங்காவது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பயிற்சி மேற்கொண்டால் அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி விடுகிறது. இதற்கு இடது சாரி கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பக்கபலமாக இருக்கின்றனர். இதனையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பை பாஜக தான் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், 2024-ம் ஆண்டு தேர்தல் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த 1925-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டு வந்துவிட்டால் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்து விடும். இதற்கு பாஜக ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் குறிக்கோள்.

கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழகத்தில் அம்மா ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியபோதும் கடைசி நேரத்தில் காவல் துறையினர் மறுத்து விட்டனர். இதை மீறி அணிவகுப்பு நடத்தியவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு ஓபிஎஸ் முதல்வராக  இருந்த போது ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு எந்த பிரச்சனையும் இன்றி சமூகமாக நடைபெற்றது. மேலும்  ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மா ஜெயலலிதா செய்ததை முதல்வர் ஸ்டாலினும் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |