ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பாக திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்..
தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் தரப்பில் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தை நாடிய பிறகு நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி 28ஆம் தேதிக்குள் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் உட்பட அனைத்து கட்சி ஊர்வலம், பேரணிகளுக்கும் காவல்துறை தடை விதித்தது.
இதனைத்தொடர்ந்து உத்தரவு மீறப்பட்டுள்ளதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆர்எஸ்எஸ் தரப்பில் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கின்றது. இதற்கிடையே ஆர் எஸ் எஸ் கூட்டத்திற்கு அனுமதி அனுமதித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தரப்பில் ஒரு மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, திருமாவளவன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எம்ஜிஆர் பிரசாத் ஆஜராகி அணிவகுப்புக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சனை தொடர்பான வழக்கு அதை குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன்பாக பட்டியலிட்டது தவறு என்றும், உரிமையியல் வழக்கை விசாரிக்க கூடிய நீதிபதி முன்புதான் பட்டியலிட வேண்டும் என்றும் வாதிட்டார்.
அதேசமயம் இந்த உத்தரவு பிறப்பித்தது தவறான உத்தரவாக இருக்கிறது. எனவே அதனை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.. காவல் கண்காணிப்பாளரோ அல்லது காவல் ஆணையரோ எதிர்மனுதாரராக சேர்த்தால் குற்றவியல் வழக்காக கருத முடியாது என்று வாதிடப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்..