டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் எனப்படும் ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தலா இருமுறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 7 முறையும், சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன் ஒரு முறையும் வென்றுள்ளார். தற்போதைய எம்.எல்.ஏ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். ஆர்கே நகர் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,62,738 ஆகும். சென்னை பெரு வெள்ளத்தில் தத்தளித்த பகுதிகளில் ஒன்றாக ஆர்கே நகர் இருந்தது.குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
போக்குவரத்து நெரிசலுக்கு முடிவுகட்ட கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்ட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். குடிநீர் குழாய்களில் எண்ணெய்க் கசிவுகள் கலப்பதாகவும் வேதனை தெரிவிக்கும் மக்கள் தூய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். கொடுங்கையூர் குப்பை கிடங்கால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட பின் ஜெயலலிதா போட்டியிட்டதால் ஆர்கே நகர் தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றது. முதலமைச்சர் தொகுதி ஆனதால் முன்மாதிரி தொகுதியாக என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்திலேயே முடிந்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2017ம் ஆண்டு ஜெயலலிதா மறைவால் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டு பின்னர் நடைபெற்றது. இதனால் பண பட்டுவாடா நடக்கும் தொகுதிக்கும் உதாரணமாக மாறியுள்ள ஆர்.கே.நகரில் வரும் தேர்தலிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது