தமிழக காவல்துறையில் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணிபுரியும் அடிப்படையில் காவல்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் சில பேர் “ஆர்டர்லி” என்ற முறையில் உயர்அதிகாரிகளின் வீடுகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த நடைமுறை பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆர்டர்லியின் பணியானது உயர்அதிகாரிகளின் போன் அழைப்புகளுக்கு பதில் அளிப்பது, சீருடைகளைப் பராமரிப்பது, உயர் அதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது ஆகிய பணிகள் மட்டுமல்லாது அவர்களின் வீட்டு வேலை, குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர்.
பொதுவாக காவல் துறையில் எடுபிடி வேலை என்பது தான் ஆர்டர்லி வேலை என பேசப்படுகிறது. தமிழக காவல் துறையில் ஆர்டர்லிமுறையை ஒழிப்பதற்கு 1979ம் வருடம் அரசாணை வெளியிடப்பட்டது. எனினும் இதுவரை ஆர்டர்லி முறை தொடர்கிறது. இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமானது, காவல் துறை உயர்அதிகாரிகளின் வீடுகளில் பணிபுரியும் ஆர்டர்லிகளை திரும்பப்பெற வேண்டுமென உத்தரவுபிறப்பித்தது.
அதன்பின் தமிழகத்தில் ஆர்டர்லிமுறை பற்றி உடனே கவனம் செலுத்த வேண்டும் என்று உள் துறை செயலாலர் தமிழக டிஜிபி-க்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்திலுள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் “ஆர்டர்லி” யாக பணிபுரிந்த 210 காவலர்களை தமிழக காவல்துறை திரும்ப பெற்றுள்ளது எனவும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் விதமாக ஆர்டர்லிகள் திரும்பப்பெறப்பட்டதாக தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்தார்.