Categories
மாநில செய்திகள்

ஆர்டர்லி முறை: 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

காவல் துறையில் பணிபுரியும் மாணிக்கவேல் என்பவர் வேறுஇடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யுமாறு 2014ம் வருடம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை பயன்படுத்தப்படுவது ஆகிய விவகாரங்கள் தொடர்பாக கேட்டார். இதனிடையில் டிஜிபி சென்ற வாரம் தாக்கல் செய்த அறிக்கையில், ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழ்நாடு அரசு மற்றும் டிஜிபி எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி நீதிபதி பாராட்டு தெரிவித்து இருந்தார்.

இவ்வழக்கில் இன்று இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர்டர்லி ஒழிப்பு முறை தொடர்பாக கடந்த 1979 ஆம் வருடம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றி, ஆர்டர்லிகளாகவுள்ள காவலர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும். அத்துடன் அலுவலக உதவியாளர் (அல்லது) இருப்பிட உதவியாளர் பணிகளை உருவாக்கும்படி தமிழக அரசுக்கு பரிந்துரை வைக்கலாம் எனவும் டிஜிபி-க்கு அறிவுரை வழங்கினார். இந்நிலையில் அரசு தரப்பில், ஆர்டர்லிகளை பயன்படுத்துவதில்லை என்றும் மேலும் 265 அதிகாரிகள் ஆர்டர்லிகளை திரும்ப அனுப்புவதாக உத்தரவாதம் வழங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி முதல்வர் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளும் கூட்டங்களை நடத்தி இருப்பதாகவும், ஆர்டர்லி ஒழிப்பு முறையில் உயர்நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்பின் கடந்த 1979-ம் வருட அரசாணைப்படி ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். மேலும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளிலுள்ள ஆர்டர்லிகளை உடனே திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசு மற்றும் டிஜிபி-க்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆர்டர்லிகள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தால் உடனே விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலிசெய்யும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்ற மனுதாரர் மாணிக்கவேலின் கோரிக்கை பற்றி தமிழக அரசை அணுகும்படியும் அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்துள்ளார்.

Categories

Tech |