அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்குப் பதில் வேறு பொருட்கள் வரும் சம்பவம் சமீப காலங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மேற் குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கைக் கடிகாரத்திற்கு பதில் மாட்டுசாணத்தை அனுப்பி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரபிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்திலுள்ள கசெண்டா கிராமத்தைச் சேர்ந்த நீலம் யாதவ் என்பவர் சென்ற செப்டம்பர் 28ம் தேதி பிளிப்கார்ட்டின் பிக்பில்லியன் டேஸ் ஆஃபரில் 1,304 ரூபாய் மதிப்புள்ள ரிஸ்ட் வாட்சை டெலிவரியின் போது பணம் செலுத்தும் வகையில் சிஓடி முறையில் ஆர்டர் செய்திருந்தார். அந்த வாட்ச் 9 நாட்களுக்கு பின் சென்ற அக்டோபர் 7ஆம் தேதி தான் டெலிவரி செய்யப்பட்டது.
அந்த வாட்சை நீலம் தனது சகோதரர் ரவேந்திராவுக்காக ஆர்டர் செய்து இருந்தார். டெலிவரி செய்யப்பட்ட வாட்சை பார்க்க ஆர்வமாக பார்சலை பிரித்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்திருந்தது. ஏனென்றால் அதில் வாட்சுக்கு பதில் மாட்டுசாணத்தால் ஆன 4 வறட்டிகளே இருந்தது. அதன்பின் ஆர்டரை டெலிவரி செய்தவரை அழைத்து உடனே ரிட்டர்ன் செய்ததோடு கொடுத்த பணத்தையும் திரும்ப பெற்றிருக்கிறார். இதுபோன்ற குழப்பங்களிலிருந்து தப்பிக்க பிளிப்கார்ட்டில் ஓபன் பாக்ஸ் டெலிவிரி என்ற அம்சமும் இருக்கிறது.