அரண்கோணத்தில் 2இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், போராட்டக் களம் தான் நமக்கான அரசியல் களம். மக்களை அரசியல் படுத்துவதற்கான களம், அமைப்பாக்குவதற்கான களம், அவர்களை புரட்சிகர சக்தியாக வென்றெடுக்க கூடிய களம் என்பதை நான் அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அதுதான் இன்றைக்கும் நடந்து இருக்கிறது. 6ஆம் தேதி தான் வாக்குப்பதிவு முடிந்தது, பத்தாம் தேதி நாம் போராட்ட களத்தில் நிற்கிறோம்.
இப்படி அடிக்கடி அடுக்கடுக்காக படுகொலை நிகழ்கின்றன. நாம் ஆர்ப்பாட்டங்களை நடத்தி முழக்கங்கள் எழுப்பி கலைத்தால் போதுமா ? என்று, சில நேரங்களில் விரத்தி நேரிடுவது உண்டு .எல்லோருக்கும் உண்டு, ஏன் எனக்கும் உண்டு. ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் தான் மக்களை, இளம் தலைமுறையை, நாம் அரசியல் படுத்த முடியும், உண்மையை தெளிவுபடுத்த முடியும்.
அதன் அடிப்படையில்தான் விடுதலை பெற விரும்புகின்ற விளிம்புநிலை சமூகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும். விரக்தியின் விளிம்பில் நின்று, நாம் விமர்சனங்களை முன்வைக்கக் கூடாது அல்லது உள் வாங்கக்கூடாது. இன்னும் எத்தனை காலம் தான் இப்படி என்ற கேள்வி எழுப்பலாம். சாதி ஒடுக்குமுறை அல்லது எந்த வகையிலான ஒடுக்கு முறையாக இருந்தாலும், ஒரே தலைமுறையில் அவற்றை நாம் தீர்த்து விட முடியாது. தகர்த்து எறிந்து விடமுடியாது. இந்த எதார்த்தத்தை, அரசியல் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
30 ஆண்டுகளாக தான் இந்த விடுதலை போராட்டக் களத்தில் வீரியத்துடன் போராடிக்கொண்டு இருக்கிறோம். சோர்ந்து விடவில்லை, நீர்த்து போகவில்லை. இன்னும் பல பத்து ஆண்டுகள் இப்படி போராட வேண்டிய நிலை வரலாம். போராட்டங்களை கொண்டுதான் மக்களை அரசியல் படுத்த முடியும். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கற்பித்து, போராட வைத்து மக்களை அமைப்பாக வேண்டும். போராடு, கள மாடு, எதிர்த்து நில் அதன் மூலமாக தான் மக்களை அமைப்பாக முடியும்.
புரட்சியாளர் அம்பேத்கர் எவ்வளவு தெளிவாக நுட்பமாக இதை உணர்ந்து இருக்கிறார் என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். 100 விழுக்காடு மக்களை அமைப்பாகி விட முடியாது, 100 விழுக்காடு மக்களை போராட்டக் களத்திற்கு கொண்டு வந்துவிட முடியாது. போராடுபவர்கள் கட்சியை சார்ந்தவர்கள், அமைப்பாக படவேண்டியவர்கள் மக்கள். இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. நாம் ஒரு கட்சியை சார்ந்தவர்கள். நம்மை கடந்து மக்கள் கோடி எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆகவே நம்முடைய போராட்டம் என்பது தான் மக்களை அரசியல் படுத்தும்.
சாதி வெறியர்கள் யார்? மதவெறியர்கள் யார் ?சமூக விரோத சக்திகள் யார் ?அவர்களை நாம் எப்படி புரிந்து கொள்வது ? அம்பலப்படுத்துவது இதுதான் முக்கியமான ஒன்று. ஓட்டு பெறுவதற்காக மட்டுமே கட்சியை தொடங்குவது, ஓட்டு போடுவதற்காக மட்டுமே உறவுகளைத் தீர்மானிப்பது, கூட்டணிகளை தீர்மானிப்பது எந்த வகையிலும் மக்களை அரசியல் படுத்தாது. அவர்களை நாம் வாக்கு வங்கியாக மட்டும் தான் பார்க்க முடியும். இந்த ஊரில் எத்தனை பேர் வசிக்கிறார் என்று சொல்ல மாட்டார்கள்…. ஓட்டு போடுபவர்களை இந்த ஊரில் நூறு ஓட்டு இருக்கிறது, இந்த ஊரில் 50 ஓட்டு இருக்கிறது, இந்த ஊரில் 75 ஓட்டு இருக்கின்றது என மனிதனை ஓட்டாக பார்க்கிறார்கள் .
25 பேர் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. மனிதர்களை மனிதர்களாக பார்க்க முடியாது. ஆகவே பேசும்போது சொல்லுவார்கள்…. இந்த ஊரில் எத்தனை ஓட்டு இருக்கிறது ? 100 ஓட்டு இருக்கிறது என ஓட்டாக தான் பார்ப்பார்கள். இது தேர்தல் அரசியல் அல்லது தேர்தல் ஜனநாயகம். நாம் நம்முடைய பயணத்தின் ஊடாக நம்முடைய விடுதலைக்கான பாதையை நாம் சந்திக்கின்ற களங்களில் இதுவும் ஒன்று. இதன் மூலமாக மக்களை அதிகாரப் படுத்த வேண்டும் என்பதற்காக தான் ,நாங்கள் களத்தில் நிற்கிறோம். இதை முதலில் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் உணர்ந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தெளிவைப் பெற வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.