ஆரிய கான் மீதான போதைப்பொருள் வழக்கின் சாட்சியை லக்னோ போலீசார் புனேயில் வைத்து கைது செய்தனர்.
மும்பையில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு அவரை ஜாமீனில் எடுக்க பல தரப்பிலும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்தது. இதில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கில் தனியார் துப்பறியும் நிபுணர் கிரண் கோசவி என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சாட்சியாக சேர்க்கபட்ட நாளில் இருந்து தலைமறைவாகி விட்டார். இதனால் இவர் மீது புனே போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். முன்பு ஆரியன் கான் கைது செய்யப்பட்ட போது அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சிக்கினார் கிரண் கோசவி.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கோசவி இருப்பதை கண்டுபிடிக்க, லக்னோ போலீசில் அவர் சரணடைய முயன்ற நிலையில், புனேயில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா தெரிவித்தார்.